
விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, நாட்டுக்காக அவர் செய்த தியாகங்களை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நினைவு கூர்ந்தனர்.
பகத் சிங்கின் 112-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நாளில், அவர் நாட்டுக்காக செய்த தியாகங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நினைவுகூர்ந்தனர்.
இதுதொடர்பாக வெங்கய்ய நாயுடு வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் விடுதலைக்காக போராடியபோது, பகத் சிங் வெளிப்படுத்திய வீரமும், தைரியமும் வருங்கால சந்ததியினருக்கு எப்போதும் எடுத்துக்காட்டாக இருக்கும். அவர் நாட்டுக்காக செய்த தியாகங்கள் அனைத்தும், அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கின்றன. நம்
நாடு அவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "வீரம் மற்றும் தியாகம் ஆகிய இரண்டுக்கும் உதாரணமாக இருப்பவர் பகத் சிங். இளைஞர்களின் மனதில் மிகப் பெரும் தலைவராக அவர் இருக்கிறார். அவரது தைரியமான செயல்கள், லட்சக்கணக்கானோரை தொடர்ந்து ஊக்குவிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1907-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பஞ்சாபில் பிறந்தவர் பகத் சிங். விடுதலைக்காக போராடியபோது, ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். அவரது தியாகம் இன்றளவும் போற்றப்படுகிறது.