
மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் நிறைவேற்றியுள்ளார்.
பாகிஸ்தான் அதிகரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்று முயற்சித்தவர் மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். மேலும், சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த வழக்கிற்காக ஒரு ரூபாயை ஊதியமாக பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
அப்போதைய மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை பாராட்டியதோடு, குல்பூஷண் வழக்கில் வாதாடியதற்காக உங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியமான ஒரு ரூபாயை நாளை வந்து என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கூறியிருந்தார்.
ஆனால், அன்றைய தினமே உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து சுஷ்மாவின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் நிறைவேற்றியுள்ளார். நேற்று வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை சந்தித்து, குல்பூஷண் வழக்கில் வாதாடிய ஊதியம் ஒரு ரூபாயை வழங்கினார்.