தசரா திருவிழா மைசூரில் இன்று தொடக்கம்

உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.29) கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.  சாமுண்டி மலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா விழாவைத் தொடக்கிவைக்கிறார்.
தசரா திருவிழா மைசூரில் இன்று தொடக்கம்

உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.29) கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.  சாமுண்டி மலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா விழாவைத் தொடக்கிவைக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. அக்.8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை மைசூரு, சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.39 மணி முதல் 10.25 மணிக்குள் சிறப்பு பூஜை செய்வதன் மூலம் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா தொடக்கிவைக்கிறார்.

மஜத எம்எல்ஏ ஜி.டி.தேவெ கெளடா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, பிரஹலாத் ஜோஷி, மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி, துணைமுதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், சி.என்.அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.சோமண்ணா, கன்னட மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி, மீன்வளத் துறை அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மைசூரு மாநகராட்சி மேயர் புஷ்பலதா ஜெகன்னாத், மைசூரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.சி.பரிமளா ஷியாம், பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிம்ஹா, சீனிவாஸ் பிரசாத், சுயேச்சை எம்.பி. சுமலதா அம்பரீஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். 

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் அமைந்துள்ள அரண்மனை, மிருகக்காட்சிச்சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தெரு விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. சாலைகளில் மின் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல பேருந்து வசதிகள், தங்கும் விடுதிகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் கிராமியக் கலை விழா, திரைப்பட விழா, உணவு விழா, புத்தகக் கண்காட்சி, மலர் கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தசரா விழாவைக் காண 10 நாள்களும் லட்சக்கணக்கான மக்கள் மைசூருக்கு வருகை தரவிருப்பதால், நகரெங்கும் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்தில் மழை வெள்ளப் பாதிப்பு, வறட்சி நிலவுவதால் ஆடம்படமில்லாமல் தசரா விழாவைக் கொண்டாட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

அக்.8-ஆம் தேதி அரண்மனை வளாகத்தில் பிற்பகல் 2.15 மணி முதல் 2.58 மணிக்குள் கொடிமர பூஜையை முதல்வர் எடியூரப்பா செய்யவிருக்கிறார். அதன்பிறகு, அன்று மாலை 4.31 மணி முதல் மாலை 4.57 மணிக்குள் அரண்மனை வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற தசராவிழாவின் யானை ஊர்வலத்தை முதல்வர் எடியூரப்பா தொடக்கி வைக்க உள்ளார்.

அன்று மாலை 7 மணியளவில் பண்ணிமண்டபத்தில் நடைபெறும் தீப்பந்த ஊர்வலத்தை ஆளுநர் வஜுபாய்வாலா தொடக்கி வைக்கிறார். பத்து நாள்கள் நடைபெறும் தசரா திருவிழாவைக் காண இந்தியா மட்டுமன்றி, உலகின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com