தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக சார்பில் போட்டியிடலாம்: எடியூரப்பா

கர்நாடகாவில் நடைபெறும் இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக சார்பில் போட்டியிடலாம் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கர்நாடகாவில் நடைபெறும் இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக சார்பில் போட்டியிடலாம் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ-க்கள் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஷிமோகா மாவட்டத்தில் தனது சொந்த ஊரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜிநாமா செய்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக சார்பில் போட்டியிட விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். அது நமது கடமை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.  

எங்களது கட்சி சார்பில் போட்டியிட நீங்கள் விருப்பம் தெரிவித்தால், உங்களை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். உங்களது வெற்றிக்கு பாஜக நிர்வாகிகளும், தலைவர்களும் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.

2018 சட்டப்பேரவைத் தேர்தலில் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர்கள், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவர்களுக்கான வேறு ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தப்படும். அடுத்த 4 நாட்களுக்குள் அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்தி 2018-இல் தோல்வியடைந்த 10-12 பாஜக தலைவர்களுக்கு மாநகராட்சிகளிலும், வாரியங்களிலும் வாய்ப்புகள் வழங்கப்படும். இதனால், அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களின் வெற்றிக்காக பணியாற்றுவார்கள்" என்றார்.     

எடியூரப்பாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பிசி பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 

"இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி எதிர்காலம் குறித்து முடிவு எடுப்போம். பாஜகவில் இணைவது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. எங்களது தகுதி நீக்கம் குறித்து நீதிமன்றம் முடிவு செய்துகொள்ளட்டும். அதன்பிறகு நாங்கள் ஆலோசனை நடத்தி, ஒரு முடிவுக்கு வருவோம்" என்றார்.

மொத்தமுள்ள 225 இடங்களில், 17 இடங்கள் காலியாக இருப்பதனால் கர்நாடக பேரவையின் பலம் தற்போது 208 ஆக உள்ளது. இதில், ஆளும் பாஜக ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு உட்பட மொத்தம் 104 எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 66 எம்எல்ஏ-களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 34 எம்எல்ஏ-க்களும் உள்ளனர். இதுதவிர, ஒரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏ, ஒரு நியமன உறுப்பினர் மற்றும் சபாநாயகர் உள்ளனர். அங்கு ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்கள் 113 ஆகும். எனவே, பாஜக ஆட்சியில் தொடர இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ-க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது. இதனால், கர்நாடகாவில் நடைபெறும் இடைத்தேர்தல் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com