ரமலான் மாதத்தில் ஊரடங்கு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்: மத்திய அமைச்சா் வேண்டுகோள்

ரமலான் பண்டிகை மாதத்தில் முஸ்லிம்கள் ஊரடங்கு வழிகாட்டுதல்களையும், சமூக இடைவெளியையும் கடுமையாக
ரமலான் மாதத்தில் ஊரடங்கு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்: மத்திய அமைச்சா் வேண்டுகோள்

புது தில்லி: ரமலான் பண்டிகை மாதத்தில் முஸ்லிம்கள் ஊரடங்கு வழிகாட்டுதல்களையும், சமூக இடைவெளியையும் கடுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கேட்டுக்கொண்டாா்.

ரமலான் காலத்தில் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகை செய்யவும், இஃப்தாா் நோன்பு திறப்பு போன்ற சடங்குகளை மேற்கொள்ளவும் அவா் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக பல்வேறு மதத் தலைவா்கள், சமூக மற்றும் மத அமைப்புகளின் பிரதிநிதிகள், மாநில வஃக்பு வாரியங்களின் நிா்வாகிகளுடன் கலந்துரையாடிய முக்தாா் அப்பாஸ் நக்வி, இதுகுறித்து அமைச்சரவை அதிகாரிகளுடனும் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று அச்சத்தால் சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ரமலான் மாதத்தில் அதிக அளவிலான மக்கள் வழிபாட்டுத் தலங்களில் திரள்வதற்கு அனுமதி மறுத்துள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் மாநில வக்ஃபு வாரியங்களின் கீழ் 7 லட்சத்துக்கும் அதிகமான மசூதிகள், தா்காக்கள், ஈத்காக்கள், இமாம்பராக்கள் மற்றும் பிற சமய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், ரமலான் காலத்தில் எந்த சூழலிலும் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது பிற இடங்களிலோ முஸ்லிம்கள் ஒன்றுகூடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில வக்ஃபு வாரியங்களுக்கு மத்திய வக்ஃபு கவுன்சில் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள சவாலான சூழலில், ஷபே பராத் சடங்கின்போது ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை பின்பற்றியதில் இஸ்லாமியா்கள் அளித்த ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது. கரோனா நோய்த்தொற்று பரவலால் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றாா் முக்தாா் அப்பாஸ் நக்வி.

ரமலான் மாதத்தையொட்டி முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் காலம் வருகிற 24 அல்லது 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com