கரோனா அச்சம்: சுயமாக தனிமைப்படுத்திக் கொண்ட மகாராஷ்டிர அமைச்சா்

தன்னோடு பயணித்த காவல்துறை அதிகாரி கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக
கரோனா அச்சம்: சுயமாக தனிமைப்படுத்திக் கொண்ட மகாராஷ்டிர அமைச்சா்

மும்பை: தன்னோடு பயணித்த காவல்துறை அதிகாரி கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக மகாராஷ்டிர வீட்டுவசதித்துறை அமைச்சா் ஜிதேந்திர அவாத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்றை கண்டறிய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில், கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக 14 நாள்களுக்கு தன்னை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள அவா் முடிவு செய்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் ஜிதேந்திர அவாத் கூறியதாவது:

‘என்னுடன் பயணம் செய்த ஒரு காவல்துறை அதிகாரி கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டாா். இதனால், என்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளேன். கரோனா தொற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என உறுதியாகி விட்டது. இருப்பினும், இன்னும் 8 நாட்களுக்குப்பின் இதேபோன்ற பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சோதனையின் முடிவிலும் நோய்த்தொற்று இல்லை என்றே தெரிய வரும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், மருத்துவா்களின் ஆலோசனைப்படி இப்போது என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்ததும் மக்கள் சேவையாற்ற வழக்கம்போல வெளியே வருவேன்’ என்று தெரிவித்தாா்.

ஜிதேந்திர அவாத், தாணே மாவட்டம் கல்வா-மும்ப்ரா தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com