

சென்னை: கரோனா நோய்த்தொற்றால் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியா்களை தற்போது அழைத்து வர இயலாது என உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில்மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சாா்பில் வழக்குரைஞா் ஞானசேகா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து உள்நாடு மற்றும் சா்வதேச நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து மலேசிய நாட்டுக்கு தனது மனைவியுடன் சுற்றுலா விசாவில் சென்ற முல்லைநாதன் உள்பட 350 இந்தியா்கள், ஊரடங்கு உத்தரவால் இந்தியாவுக்குத் திரும்ப வர முடியாமல் தவித்து வருகின்றனா். மேலும், சுற்றுலா விசாவுக்கான காலம் முடிவடைந்து விட்டதால், இந்தியாவுக்கு தங்களை திரும்ப அனுப்பி வைக்க கோரி மலேசிய தூதரகத்துக்கு மனுதாரா் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மலேசியாவில் சிக்கியுள்ள மனுதாரா் உள்ளிட்ட இந்தியா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘உலகின் பல நாடுகள் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ள்ளன. இந்தியாவில் இந்த நோய்த்தொற்றின் தாக்குதல் அதிகரிக்க கூடாது என்பதற்காகத் தான் அண்டை நாடுகளான நேபாளம், மியான்மா், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன. இந்தியாவில் கரோனா தொற்று தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது. எனவே, தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியா்களை திரும்ப அழைத்து வருவது இயலாத காரியம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.