

திருவனந்தபுரம்: கரோனா நோயாளிகளின் தகவல்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பட்ட விவகாரம் குறித்து கேரள அரசு மீது காங்கிரஸ் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 20,178 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 645 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக கேரளாவில் கரோனா நோயாளிகளின் தகவல்கள் அரசால் சேகரிக்கப்பட்டு, அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்படுவதாக மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக கேரள சட்டபேரவை எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் கரோனா பாதிப்புள்ள நோயாளிகள் குறித்த தகவல்களானது வார்டு வாரியாக அரசால் சேகரிக்கப்பட்டு, அமெரிக்காவில் உள்ள மார்கெட்டிங் நிறுவனமான ஸ்ப்ரிங்லரின் சர்வர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இத்தகைய தகவல் பரிமாற்றங்களை உலகின் பெரும்பாலான நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் நமது நாட்டிலேயே இத்தகைய தகவல்களை ஆராய்வதற்கு என்று புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக்கும் நிலையில், ஏன் அரசே அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு அனுப்புகிறது என்பதுதான் சந்தேகமாக உள்ளது. அந்த நிறுவனமானது கேரள அரசு முத்திரையைக் கூட பயன்படுத்துகிறது. இது எல்லாமே நமது மக்களின் ஆரோக்கியம் தொடர்புடைய முக்கிய தகவல்களாகும்.
ஏன் இதெல்லாம் நடைபெறுகிறது? இதன்மூலம் பண ஆதாயம் பெறுவது யார்? இவை குறித்தெல்லாம் தெளிவான விளக்கம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஸ்ப்ரிங்லர் நிறுவனத்திற்கும் கேரள அரசிற்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும், யாருடைய தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதோ அவர்களுக்கு மாநில முதல்வரும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலரும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மாநில உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் சென்னிதாலா வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
அதேநேரம் மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகளுக்குச் சொந்தமான பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் ஸ்ப்ரிங்லர் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதாகவும், அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரகி தாமசை, .பினராயி விஜயனின் மகள் அமெரிக்காவில் ஆறு முறைகள் சந்தித்துள்ளார் என்றும் வெளிப்படையாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.