பிரசாந்த் பூஷண் வழக்கில் நீதியைச் சிதைக்காதீர்கள்: உச்சநீதிமன்றதிற்கு எதிராக 1500 வழக்குரைஞர்கள் கூட்டறிக்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிரசாந்த் பூஷண் வழக்கில் நீதியைச் சிதைக்காதீர்கள் என மூத்த வழக்குரைஞர்கள் 1500 பேர் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்
வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிரசாந்த் பூஷண் வழக்கில் நீதியைச் சிதைக்காதீர்கள் என மூத்த வழக்குரைஞர்கள் 1500 பேர் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஜூன் 6 அன்று , பிரசாந்த் பூஷண் தனது சுட்டுரைப் பக்கத்தில், "கடந்த 6 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கு" எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை எழுதியிருந்தார்.

தனது மற்றொரு பதிவில், ஜூன் 29 அன்று, இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி, ஹெல்மெட் மற்றும் முகக் கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுதொடா்பாக, விளக்கம் கேட்டு பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதிலளித்த பிரசாந்த் பூஷண் தரப்பின் பதில் மனு கடந்த 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த பதில் மனுவில் இரு சுட்டுரைப் பதிவுகளிலும் நீதிபதிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே விமா்சிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவா்களின் நீதிமன்ற நடவடிக்கைகள் விமா்சிக்கப்படவில்லை என்றும் பிரசாந்த் பூஷண் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இது பல்வேறு தரப்பினரிடையே விமர்சனத்தைக் எழுப்பியது. இதுகுறித்து நாடுமுழுவதும் உள்ள மூத்த பார் கவுன்சில் வழக்குரைஞர்கள் 1500 பேர் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “ஒரு சுதந்திரமான நீதித்துறை என்பது நீதிபதிகள், கருத்து மற்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல. எந்தவொரு குறைபாடுகளையும் தாராளமாக  பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருவது வழக்கறிஞர்களின் கடமையாகும்.” எனத் தெரிவித்துள்ளது.

இந்தத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள வழக்குரைஞர்கள் இதனை மறுவிசாரணைக்கு உட்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த அறிக்கையில் மூத்த வழக்கறிஞர்களான ஸ்ரீராம் பஞ்சு, அரவிந்த் தாதர், ஷியாம் திவான், மேனகா குரு-சுவாமி, ராஜு ராமச்சந்திரன், பிஸ்வாஜித் பட்டாச்சார்யா, நவ்ரோஸ் சீர்வாய், ஜனக் துவாரகாதாஸ், இக்பால் சக்லா, டேரியஸ் கம்பதா, பிருந்தா ஜாவாய், கிருமி தேஸ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com