பிரசாந்த் பூஷணுக்கு அரை மணி நேரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்த கருத்தை திரும்பப் பெற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் அரை மணி நேரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
பிரசாந்த் பூஷணுக்கு அரை மணி நேரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
பிரசாந்த் பூஷணுக்கு அரை மணி நேரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read


புது தில்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்த கருத்தை திரும்பப் பெற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் அரை மணி நேரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

பிரசாந்த பூஷண் இதுவரை தவறை உணர்ந்ததாக தெரியவில்லை. மன்னிப்புக் கடிதமும் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதித் துறையை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளவர், அவர் மன்னிக்கப்பட வேண்டும், அவருக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் வாதிட்டார்.

இதையடுத்து, பிரசாந்த் பூஷணுக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆனால், அவர் அவமதிப்புக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மறுக்கிறார். அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரவில்லை என்று நீதிபதிகள் கூறினர். மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து வெளியிட்ட கருத்தை திரும்பப் பெற பிரசாந்த் பூஷணுக்கு அரை மணி நேரம் கால அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

நீதித் துறையை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் 2 பதிவுகள் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக, பிரசாந்த் பூஷண் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது, நீதித் துறையில் தவறுகள் நடைபெறும்போது அதனை சுட்டிக் காட்டுவது எனது கடமை. அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேனே தவிர, உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவோ, குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு எதிராகவோ கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் பணியில் இருந்து தடம் மாறுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதற்காகவே ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்திருந்தேன்.

சுட்டுரையில் நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன். குடிமகனாகவும், வழக்குரைஞராகவும் பொது வெளியில் கருத்துகளைத் தெரிவிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

எனவே எனது கருத்துக்கு நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது என்பது எனது மனசாட்சிக்கு எதிரானதும், போலியானதும் ஆகிவிடும்.

மக்களின் அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றமே விளங்குகிறது. 

குழப்பம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சியையும், அரசியலமைப்பு சட்டத்தையும் உச்சநீதிமன்றமே காக்கும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மதிப்பு வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இப்போது மன்னிப்புக் கேட்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மன்னிப்புக் கேட்க மறுக்கும்பட்சத்தில், அவருக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com