கரோனா மத்தியில் இந்தியாவில் தேர்வு என்பது நியாயமற்றது: கிரெய்தா கருத்து
கரோனா பரவல் மத்தியில் இந்திய மாணவர்களை தேர்வெழுத கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என பிரபல சூழலியல் செயற்பாட்டாளர் கிரெய்தா துன்பர்கி கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்முடியாத சூழல் உள்ளது. இதனைத் தொடர்ந்து தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.
ஆனால் இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சூழலியல் செயற்பாட்டாளரான ஸ்வீடனைச் சேர்ந்த கிரெய்தா துன்பர்கி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது சுட்டுரைப் பதிவில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரெய்தா, “கரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் இந்தியாவில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை மாணவர்களை எழுதச் சொல்வது நியாயமற்றது. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் கோரிக்கைக்கு நான் உடன்படுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற உள்ள தேர்வை ஒத்தி வைக்கக்கோரும் கிரெய்தாவின் கருத்து இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.