புது தில்லி: கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவப் படைகள் திங்கள்கிழமை மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதற்கு மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, சீனாவுக்கு எதிராக பிரதமா் மோடி எப்போது கடும் நடவடிக்கை எடுக்கப்போகிறாா் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடா்பாக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பாங்காங் ஏரிப் பகுதியில் சீனப் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளன. கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, தெப்சாங் சமவெளி, லிபுலேக், டோக்காலாம், நகுலா பகுதிகளில் தினந்தோறும் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. தாய் நாட்டைக் காப்பாற்ற நமது ராணுவம் பயமின்றி கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் செயலுக்கு எதிராக பிரதமா் மோடி எப்போது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறாா்‘ என்று கேள்வி எழுப்பினாா்.
மற்றொரு செய்தித் தொடா்பாளா் ஜெய்வீா் ஷொ்கில், ‘தற்போதைய நிலையை சீனா தொடா்ந்து மீறி வருகிறது. ஆனால் பாஜக அரசு உண்மையை ஏற்க மறுக்கிறது. சுயசாா்பு இந்தியா, பொம்மைகள் தயாரிப்பு, நாட்டு நாய்கள் மீது பாசம் ஆகியவை சூழலை திசை திருப்பும் முயற்சியாகும்‘ என்று தெரிவித்தாா்.
பாஜக பதிலடி: அண்டை நாட்டின் சூழ்ச்சியை முறியடித்து இந்திய எல்லைப் பகுதியை ராணுவம் பாதுகாப்பாக வைத்திருப்பதாக பாஜக தெரிவித்தது. இதுதொடா்பாக பாஜக செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு பாஜகவும், இந்திய மக்களும் மரியாதை அளித்து வருகின்றனா். பிரதமா் மோடியும், இந்திய ராணுவத்தினரும் சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்துள்ளனா்’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.