முழுநேர காங். தலைவரை தேர்ந்தெடுக்க அவசரம் இல்லை: சல்மான் குர்ஷித் 

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு அவசரம் இல்லை என மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்
மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்


புது தில்லி: காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு அவசரம் இல்லை என மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான, முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பது, கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது உள்பட அமைப்புரீதியான மாற்றங்கள் தேவை என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் கடிதம் எழுதினர். 

இதுதொடர்பாக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடத்தப்படும் வரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடருவார் எனவும், அமைப்புரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக அவருக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவருமான முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியது: சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய தலைவர்கள் அவரை எப்போதுமே அணுகக்கூடியவர்கள்தான். ஆதலால், தங்களது கருத்துகள் தொடர்பாக கடிதம் எழுதியதற்குப் பதிலாக அவரை நேரில் அணுகி தெரிவித்திருக்கலாம். இந்த விஷயத்தை கட்சியின் எல்லைக்குள் விவாதித்திருப்பதே சிறந்தது என்றுதான் சோனியா காந்தியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கையெழுத்திடும்படி யாரும் என்னை அணுகவில்லை. அவ்வாறு அணுகியிருந்தாலும் அக்கடிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லாததால் நான் கையெழுத்திட்டிருக்க மாட்டேன்.

என்னைப் போன்றவர்களைப் பொருத்தவரை எங்களுக்கு ஏற்கெனவே தலைவர்கள் உள்ளனர். சோனியா காந்தியிலும், ராகுல் காந்தியிலும் எங்களுக்கு தலைவர்கள் உள்ளனர். ஆதலால், தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த அவசரமும் தேவையில்லை. 

ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது எப்போது நடைபெறுமோ அப்போது நடைபெறும். அதற்காக வானம் வீழ்வதை என்னால் பார்க்க முடியாது. தலைவரை தேர்ந்தெடுப்பதில் என்ன அவசரம் உள்ளது என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை.

எங்களிடம் இருப்பது ஒரு பகுதிநேர தலைவர் அல்ல, முழுநேர தலைவர் இருக்கிறார். ஆனால், முழுநேர தலைவர் ஓர் இடைக்காலத் தலைவராக இருக்கிறார். மேலும், அவர் சாதாரண நபர் இல்லை, அவர் நீண்டகாலம் பணியாற்றிய தலைவர். 

இது சரியான நேரம் என அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போது நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரிடம் விட்டுவிட வேண்டும்.

அதேபோல, கட்சித் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் தலைவர்கள் வலியுறுத்துவதற்கு பதிலாக, முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com