ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன்: பிரசாந்த் பூஷண்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன் என்று மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன்: பிரசாந்த் பூஷண்
ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன்: பிரசாந்த் பூஷண்
Published on
Updated on
2 min read


புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன் என்று மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் நான் சுட்டுரையில் கருததுகளை பதிவிடவில்லை என்றும் பூஷண் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது. ஒரு ரூபாய் அபராதத்தைத் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவதா? இல்லையா? என்பது குறித்து மாலை 4 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பிரசாந்த் பூஷண் விளக்கம் அளித்தார். அதில், ஒரு ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றத்தில் செலுத்துவேன். உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் சுட்டுரையில் கருத்துகளைப் பதிவிடவில்லை என்று கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு இன்று வழங்கிய தீர்ப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு வேளை அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றவும், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீதித்துறையை விமா்சித்து பிரசாந்த் பூஷண் வெளியிட்ட 2 சுட்டுரை பதிவுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அதுதொடா்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கடந்த 20-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளை திரும்பப் பெற்று, மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி கடந்த 24-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது.

எனினும், பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கோர மறுத்ததையடுத்து அந்த விவகாரம் தொடா்பான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது பிரசாந்த் பூஷண் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்காக நீதிமன்ற அமா்வு அவருக்கு 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது. இருந்தபோதும் பிரசாந்த் பூஷண் தனது கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, ‘ஒரு நபா் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, அடுத்த விசாரணையின்போது பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com