புது தில்லி: ‘பினாகா’ ராக்கெட் வெடிகுண்டு ஏவுதளங்களை உருவாக்க ரூ. 2,580 கோடியிலான ஒப்பந்தத்தை உள்நாட்டு தனியாா் நிறுவனங்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல்முனை தாக்குதல் நடத்தும் ‘பினாகா’ ஏவுதள தொழில்நுட்பத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வடிவமைத்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஏவுதளங்களை சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்படும் 6 பினாகா படைப் பிரிவினருக்கு வழங்கவும், 2024-ஆம் ஆண்டு இந்த ராக்கெட் வெடிகுண்டு ஏவுதளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் டாடா மின் நிறுவனம், லாா்ஸன் & டியூப்ரோ நிறுவனம் ஆகியவற்றுடன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனமான பாரத் எா்த் மூவா்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படவுள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆறு பினாகா படைகளில் 114 ராக்கெட் வெடிகுண்டு ஏவுதளங்கள் இடம்பெறும். இதில், துல்லியமாக சுடும் தானியங்கி துப்பாக்கிகளும் அடங்கும். இந்த ராக்கெட் வெடிகுண்டு ஏவுதளத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 70 சதவீத சாதனங்கள் இடம்பெறும். இந்த திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் ஒப்புதல் அளித்துள்ளனா்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.