'போராட்டம் தொடரும்': பேச்சுவார்த்தைக்குப் பிறகு விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
'போராட்டம் தொடரும்': பேச்சுவார்த்தைக்குப் பிறகு விவசாயிகள் அறிவிப்பு


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 6 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்பதாக விவசாயிகள் தரப்பும் அறிவித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் 32 விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 3 1/2 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் சற்று முன்பு நிறைவுற்றது.

இதன்பிறகு பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்ததாவது:

"கூட்டம் நன்றாக அமைந்தது. டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். நாங்கள் சிறு குழுவை அமைக்க வேண்டும் என்றோம். ஆனால், அவர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். அதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. போராட்டத்தை ரத்து செய்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளோம். எனினும், இந்த முடிவு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளிடம்தான் உள்ளது" என்றார். 

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பங்கேற்ற பிரதிநிதி சந்தா சிங் இதுபற்றி தெரிவித்ததாவது:

"வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். அரசிடமிருந்து தோட்டாக்களோ, அமைதித் தீர்வோ எதுவாக இருந்தாலும் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வோம். மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் திரும்ப வருவோம்" என்றார் அவர்.

அமைச்சருடனான சந்திப்பு குறித்து அனைத்திந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் தெரிவித்ததாவது:

"இன்றையக் கூட்டம் நன்றாக அமைந்தது. சில முன்னேற்றங்கள் இருந்தன. டிசம்பர் 3-ம் தேதி அரசுடன் நடைபெறவுள்ள அடுத்த சந்திப்பின்போது, வேளாண் சட்டங்களிலுள்ள ஒரு பிரிவுகூட விவசாயிகளின் நலனுக்கானது அல்ல என்று அவர்களை சமாதானப்படுத்துவோம். எங்களது போராட்டம் தொடரும்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com