வலுக்கிறது விவசாயிகள் போராட்டம்: தில்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அறிவித்திருப்பதையடுத்து தில்லி எல்லைகளில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
வலுக்கிறது விவசாயிகள் போராட்டம்: தில்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
வலுக்கிறது விவசாயிகள் போராட்டம்: தில்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அறிவித்திருப்பதையடுத்து தில்லி எல்லைகளில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ஜெய்ப்பூர் - தில்லி மற்றும் தில்லி - ஆக்ரா எக்ஸ்பிரஸ் வே சாலைகள் இன்று முடக்கப்படும் என்று விவசாயிகள் அறிவித்ததையடுத்து தில்லி காவல்துறையினர் அப்பகுதிகளில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் கடந்த 16- நாள்களாக பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையில், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் தில்லி நோக்கி டிராக்டர்களில் வந்து கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தால், போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துக் காவலர்கள் பல முக்கிய இடங்களில் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், தில்லி போக்குவரத்துக் காவலர்கள் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, அச்சண்டி, பியாவு மணியாரி மற்றும் மங்கேஷ் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சாலைகள் மூடப்பட்டிருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளான லாம்புர், சஃபியாபாத், சபோலி, சிங்கு பள்ளி சுங்கச்சாவடி வழியாக பயணிக்குமாறும், முகர்பா மற்றும் ஜிடிகே சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து தாங்கள் அனுப்பிய பரிந்துரைகளை பரிசீலித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் எங்களது போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்திருக்கும் விவசாயிகள், நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டங்களும் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com