21 வயதில் மேயர்: திருவனந்தபுரத்தில் இளம்பெண் சாதனை

கேரளத்தைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் நாட்டில் இளவயதில் மேயராகும் பெண் எனும் சாதனையை அவர் படைக்க உள்ளார்.
ஆர்யா ராஜேந்திரன்
ஆர்யா ராஜேந்திரன்
Updated on
1 min read

கேரளத்தைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் இளவயதில் மேயராகும் பெண் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

கேரள மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன. 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் நடந்து முடிந்த தேர்தலில் அதிகளவு இளவயதினரை தேர்தல் களம் இறக்கின. இதில் ஆளும் இடது முன்னணி அரசின் வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றினர்.

அந்த வகையில் முடவன்முகலைச் சேர்ந்த ராஜேந்திரன்-ஸ்ரீலதா ஆகிய தம்பதியின் மகள் ஆர்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர்யா ராஜேந்திரன் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீகலாவை விட 2872 வாக்குகள் அதிகம் பெற்று அப்பகுதியின் மாமன்றப் பிரதிநிதியாக தேர்வானார். 

துடிப்பான அரசியல் செயல்பாடுகள் காரணமாக 21 வயதேயான ஆர்யாவை தற்போது திருவனந்தபுரம் மேயராக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. இதன்மூலம் நாட்டில் மிக இளம்வயதில் மாநகராட்சி மேயராகும் சாதனையை ஆர்யா படைத்துள்ளார்.

இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக் குழுவில் உள்ள ஆர்யா ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் இளங்கலை கணித மாணவி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வரும் ஆர்யா குழந்தைகளுக்கான பாலர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் தனக்கு ஒப்படைக்கப்பட்டப் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com