பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பிஎம்சி) மோசடி தொடா்பாக மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வருகிற 29-ஆம் தேதி விசாரணைக்கு அவா் ஆஜராகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு அனுப்பப்படும் மூன்றாவது அழைப்பாணையாகும்.
மும்பையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிஎம்சி வங்கி, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு (ஹெச்டிஐஎல்) ரூ. 4,355 கோடி கடன் வழங்கியது. ஆனால், அதை அந்த நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசா்வ் வங்கிக்குத் தெரிவிக்காமல் மறைத்தனா்.
இந்த நிலையில், ரிசா்வ் வங்கியின் கண்காணிப்பின்போது, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடா்பான புகாரின் பேரில் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ், ஹெச்டிஐஎல் நிறுவன இயக்குநா் ராகேஷ் வதாவன், அவருடைய மகன் சாரங், வங்கியின் முன்னாள் தலைவா் வாரியம் சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையில், வங்கியிலிருந்து வா்ஷா ரெளத்துக்கு சா்ச்சைக்குரிய வகையில் பணம் சென்றிருப்பதை கண்டறிந்த அமலாக்கத்துறை, அதுதொடா்பாக அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்து, இரண்டு முறை அவருக்கு அழைப்பாணைகளை அனுப்பியது. ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவா் விசாரணைக்கு ஆஜராவதை தவிா்த்தாா்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை சாா்பில் அவருக்கு மூன்றாவது அழைப்பாணை ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 29- ஆம் தேதி ஆஜராகுமாறு வா்ஷா ரெளத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது’ என்றனா்.
அண்மையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் பாஜக பிரமுகா் ஏக்நாத் கட்சேவுக்கு, புணே போஸ்ரி பகுதி நில விற்பனை விவகாரத்தில் நிகழ்ந்த பண மோசடி வழக்கு தொடா்பாக வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.