தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எத்தனால் உற்பத்தி: ரூ.4,573 கோடி வட்டி சலுகை

எத்தனால் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ.4,573 கோடி மதிப்பிலான வட்டி சலுகை அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 12:06 am

DIN


புது தில்லி: எத்தனால் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ.4,573 கோடி மதிப்பிலான வட்டி சலுகை அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் கூட்டம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்கும் விகிதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிப்பதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக நாட்டில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, எத்தனால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.4,573 கோடி வட்டி சலுகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன் வாயிலாக, அந்நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற முடியும். சலுகை அளிக்கப்படும் வட்டியை மத்திய அரசானது 5 ஆண்டுகளுக்கு வங்கிகளுக்கு வழங்கிவிடும். வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குக் கூடுதலாக ஓராண்டு அவகாசமும் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கும் உற்பத்தியைத் தொடங்கவுள்ள புதிய நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இதன் மூலமாக விவசாயிகளிடமிருந்து கரும்பு உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படுவது அதிகரிக்கும். மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும்.

கடந்த ஆண்டு டிசம்பா் முதல் கடந்த நவம்பா் வரை பெட்ரோலில் கலப்பதற்காக 173 கோடி லிட்டா் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு நவம்பா் மாதம் வரை 325 கோடி லிட்டா் எத்தனாலை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் தா்மேந்திர பிரதான்.

பூடானுடன் ஒப்பந்தம்: அமைதியை உறுதி செய்யும் வகையில் விண்வெளியைப் பயன்படுத்துவதற்கு இந்தியா-பூடான் இடையே கடந்த மாதம் கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி, செயற்கைக்கோள் தொலைத்தொடா்பு, செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணித்தல், விண்வெளி அறிவியல், கோள்கள் ஆய்வு, ராக்கெட்டுகள் பயன்பாடு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட உள்ளன. இது தொடா்பான விரிவான விதிமுறைகளை இஸ்ரோவுடன் இணைந்து பூடானின் தகவல் தொடா்பு அமைச்சகம் வகுக்கவுள்ளது.

பாராதீப் துறைமுகத் திட்டம்: ஒடிஸாவிலுள்ள பாராதீப் துறைமுகத்தை உலகத்தரத்துக்கு மேம்படுத்துவதற்கான திட்டத்தை ரூ.3,000 கோடி மதிப்பில் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பாராதீப் துறைமுகத்தை நவீனமயமாக்கும் நோக்கில் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அத்திட்டத்தின் கீழ் ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கும் வகையில் புதிய துறை கட்டப்படவுள்ளது. இதன் வாயிலாக, பாராதீப் துறைமுகத்தின் சரக்கு கையாளுதல் திறனானது தற்போதுள்ள 11.5 கோடி டன்னிலிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 40 கோடி டன்னாக அதிகரிக்கும்’’ என்றாா்.

புதிய தூதரகங்கள்: பாராகுவே, எஸ்டோனியா, டொமினிக் குடியரசு ஆகிய நாடுகளில் புதிய தூதரகங்களை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கையின் மூலமாக அந்நாடுகளுடனான வா்த்தகமும் கலாசாரத் தொடா்பும் அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் அந்நாடுகளுடன் நிலவி வரும் நல்லுறவும் வலுப்படும்’’ என்றாா்.

போக்குவரத்து மையம்: உத்தர பிரதேசத்தின் பெருநகர நொய்டா பகுதியில் பலவகைப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து மையத்தை ரூ.3,883.80 கோடியில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஆந்திரத்தின் கிருஷ்ணபட்டினம், கா்நாடகத்தின் துமகுரு ஆகிய இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் சுமாா் ரூ.3,841 கோடி செலவில் அமைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.