'மொகல் தோட்டம்' மக்கள் பார்வைக்கு பிப். 5இல் திறப்பு

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள "மொகல் தோட்டம்', பிப்ரவரி 5-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படவுள்ளது.
'மொகல் தோட்டம்' மக்கள் பார்வைக்கு பிப். 5இல் திறப்பு

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள "மொகல் தோட்டம்', பிப்ரவரி 5-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவரின் துணை ஊடகச் செயலர் நிமேஷ் ரஸ்தகி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: 

மொகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிடும் வருடாந்திர "உத்யனோத்சவ்' நிகழ்வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, புதன்கிழமை (பிப்.5) முதல் மொகல் கார்டனைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

மார்ச் 8-ம் தேதி வரை இந்த தோட்டம் திறந்திருக்கும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். எனினும், பாரமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமைகளில் பூங்கா மூடப்பட்டிருக்கும். மக்கள் இந்தத் தோட்டத்தை இலவசமாகப் பார்வையிடலாம். 

மொகல் கார்டனைப் பார்வையிட விரும்புபவர்கள்

HTTPS://RASHTRAPATISACHIVALAYA.GOV.IN, HTTPS://RB.NIC.IN/RBVISIT/VISIT_PLAN.ASPX  

ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், நேரடியாக வருவோர் குடியரசுத் தலைவர் மாளிகையின் நார்த் அவென்யு அருகே உள்ள 35-ஆவது நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்படுவர். இருப்பினும், இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு தனி வரிசை இருக்கும். 

விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படை வீரர்கள், தில்லி காவல்துறை வீரர்கள் மொகல் தோட்டத்தை மார்ச்- 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரத்யேகமாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக மார்ச் 11-ஆம் தேதி காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தனியாக தொடுகை மூலிகைத் தோட்டம் திறந்திருக்கும். இவர்கள், நார்த் அவென்யுவில் உள்ள நுழைவு வாயில் எண்- 12 வழியாக வருமாறு கோரப்படுகிறார்கள். 

மொகல் தோட்டத்துக்கு வரும் பொதுமக்கள், நார்த் அவென்யுவில் உள்ள நுழைவு வாயில் எண்-35 வழியாக அனுமதிக்கப்படுவர். இந்த நுழைவு வாயில் சர்ச் சாலையின் கடைசியில், கதீட்ரல் தேவாலயத்தின் மேற்குப் பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டரில் அமைந்துள்ளது. 

அருங்காட்சியகத்துக்கும் வரக் கோரிக்கை: மலர் தோட்டத்தைப் பார்வையிட வரும் மக்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்துக்கும் வருகை தருமாறு அருங்காட்சியகத்துக்கான மக்கள் தொடர்பு அதிகாரி குமார் சம்ரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தினமணியிடம் கூறுகையில், "சுதந்திரப் போராட்டம், காந்தியடிகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவர்களுக்கு கிடைத்த பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள், படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மொகல் தோட்டத்தைப் பார்க்க வரும் மக்கள், இந்த அருங்காட்சியகத்தையும் பார்வையிட வேண்டும். மாணவர்கள் தமது பாடத்திட்டங்களில் படிக்கும் பல்வேறு விஷயங்களை இங்கே காட்சிப்படுத்தியுள்ளோம். எனவே மாணவர்கள் அதிகளவில் வந்து பார்வையிட வேண்டும்' என்றார். 

10,000 துலிப் மலர்கள்

நிகழாண்டு விழாவில் பல்வேறு வகை பூக்கள், அயல்நாட்டுப் பூக்கள் ஆகியவற்றுடன் பல்வேறு நிறங்களில் 10 ஆயிரம் துலிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இப்பூக்களால் செய்யப்படும் விரிப்பு அலங்காரங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், காற்றைச் சுத்திகரிக்கும் தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கறுப்பு, நீலம் ஆகிய அரிய நிறங்களை உடைய 138 வகையான ரோஜாக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மெனாக்கோ நாட்டின் இளவரசர் வழங்கிய ரோஜா செடியும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், பருவநிலைகளில் மலரும் 70 வகையான மலர்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

குடியரசுத் தலைவர் மாளிகையில் இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com