வைரல் விடியோ: தில்லி காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி மாணவர் வழக்கு

தில்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த மாணவர், காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வைரல் விடியோ: தில்லி காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி மாணவர் வழக்கு


தில்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த மாணவர், காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் வன்முறையில் முடிவடைய, காவல் துறையினர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தப் போராட்த்தின்போது வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான விடியோ ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதில், காவல் துறை உடையணிந்திருந்தவர்கள் நூலகத்தில் இருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை வெளியேற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த விடியோ நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், தில்லி காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி எம்.ஏ. இரண்டாம் ஆண்டு பயிலும் முகமது முஸ்தபா என்ற மாணவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"நான் அரசிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒரு நபர் நூலகத்திலேயே பாதுகாப்பாக இல்லை என்றால், வேறு எங்கு அவரோ அல்லது அவளோ பாதுகாப்பாக இருப்பார்கள்? நான் செய்த குற்றம் என்ன என்று தில்லி காவல் துறையை கேட்க விரும்புகிறேன். தில்லி காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன்.

அன்றைய தினம் நான் காலை முதல் நூலகத்தில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். சுமார் மாலை 6 மணியளவில், எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் வளாகத்தினுள் நுழைந்த காவலர்கள் அனைவரது மீதும் தடியடி நடத்தினர். எந்தப் போராட்டத்திலும் பங்கெடுக்காதபோதிலும் நான் தாக்கப்பட்டேன்.

எனக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன. 

1. இழப்பீடு
2. வழக்குப்பதிவு
3. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com