விஜய் மல்லையா மனு: விசாரணை தேதியை அறிவித்தது உச்ச நீதிமன்றம்

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைத் தேதியை செவ்வாய்க்கிழமை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
விஜய் மல்லையா மனு: விசாரணை தேதியை அறிவித்தது உச்ச நீதிமன்றம்

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைத் தேதியை செவ்வாய்க்கிழமை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா (63) கடந்த 2016ஆம் ஆண்டு லண்டன் தப்பிச் சென்று தஞ்சமடைந்தாா். இதையடுத்து அவருக்கு எதிராக அமலாக்கத் துறையும், சிபிஐ அமைப்பும் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பிரிட்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்திய விசாரணை அமைப்புகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பிரிட்டன் உயா் நீதிமன்றத்தில் மல்லையா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மல்லையா ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கிகளில் இருந்து கடன் பெறவில்லை என்று தெரிவித்தனா்.

இந்திய நீதிமன்றங்களுக்கு மல்லையா பதிலளிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் சாா்பில் வாதாடிய வழக்குரைஞா்கள் வாதத்தை முன்வைத்தனா். மேல்முறையீட்டு மனு மீதான 3 நாள் விசாரணை கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதை அடுத்து, மல்லையா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை எனது சொத்துகளை முடக்கியது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. வங்கிகளுக்கு நான் தர வேண்டிய பணத்தை தர தயாராக இருக்கிறேன். ஆனால், அமலாக்கத் துறை எனது சொத்துகள்தான் வேண்டும் என்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக காரணமே இல்லாமல் அமலாக்கத் துறையும், சிபிஐயும் என்னை தொந்தரவு செய்து வருகின்றன என்றாா்.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹோலி விடுமுறைக்குப் பின்னர் மார்ச் மாதம் முதல் இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com