தில்லி அரசுப் பள்ளிக்கு மெலானியா டிரம்ப் வருகை: கேஜரிவால், சிசோடியாவுக்கு அழைப்பில்லை

தில்லி அரசுப் பள்ளியைப் பார்வையிடும் மெலானியா டிரம்பின் நிகழ்ச்சிக்கு அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி அரசுப் பள்ளிக்கு மெலானியா டிரம்ப் வருகை: கேஜரிவால், சிசோடியாவுக்கு அழைப்பில்லை
Published on
Updated on
1 min read


தில்லி அரசுப் பள்ளியைப் பார்வையிடும் மெலானியா டிரம்பின் நிகழ்ச்சிக்கு அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோர் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது அவர்கள் தில்லி மற்றும் ஆமதாபாத்துக்குச் செல்லவுள்ளனர். இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிப்ரவரி 25-ஆம் தேதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

இதனிடையே, மெலானியா டிரம்ப் தெற்கு தில்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மகிழ்ச்சி வகுப்பைப் பார்வையிடவுள்ளார். மகிழ்ச்சி வகுப்புகள் குறித்து மாணவர்களுடன் கேட்டறியவுள்ள அவர், சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் செலவிட உள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் மெலானியா டிரம்பை வரவேற்று அதில் பங்கேற்பார்கள் என முன்னதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மெலானியா டிரம்ப் தில்லி அரசுப் பள்ளிக்கு வரும் நிகழ்ச்சிக்கு அரவிந்த் கேஜரிவாலுக்கும், மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இன்று (சனிக்கிழமை) தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னணியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு இருப்பதாகவே ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. 

இதுகுறித்து ஆம் ஆத்மியின் தேசிய நிர்வாக உறுப்பினர் பிரீத்தி சர்மா மேனன் சுட்டுரைப் பதிவில் குறிப்பிடுகையில், "உங்களுடைய அற்பத்தனத்துக்கு ஈடே இல்லை பிரதமர் மோடி. அரவிந்த் கேஜரிவாலையும், மணீஷ் சிசோடியாவையும் நீங்கள் அழைக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்களுடையப் பணி அவர்களுக்காகப் பேசும்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் இதுகுறித்து சுட்டுரையில் தெரிவிக்கையில், "அலுவல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பிதழை அனுப்பும் அற்பத்தனமான அரசியல் மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல" என்றார்.

மகிழ்ச்சி வகுப்பு:

ஆம் ஆத்மி அரசு கடந்தாண்டு, அனைத்துப் பள்ளிகளிலும் மகிழ்ச்சி வகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த வகுப்பு நாள்தோறும் முதல் வகுப்பாக 45 நிமிடங்கள் நடைபெறும். இதன் பலனாக குழந்தைகளின் நடத்தையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com