உற்சாக வரவேற்பு அளித்த மாணவர்களுக்கு நன்றி: தில்லி அரசுப் பள்ளியில் மெலானியா உரை

தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகை தந்த தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்த மாணவ, மாணவிகளுக்கு நன்றி என்று அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா கூறினார்.
உற்சாக வரவேற்பு அளித்த மாணவர்களுக்கு நன்றி: தில்லி அரசுப் பள்ளியில் மெலானியா உரை

புது தில்லி: தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகை தந்த தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்த மாணவ, மாணவிகளுக்கு நன்றி என்று அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா கூறினார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகை தந்தார்.  அவருக்கு மாணவ, மாணவிகள் அழகான அலங்கார ஆடைகளுடன் சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

தில்லியின் தெற்கு மோடி பாக் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், மெலானியாவை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளிக்கு வருகை தந்த மெலானியாவை மகிழ்விக்கும் வகையில் ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் மாணவ, மாணவிகள் நடத்திக் காட்டினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை உற்சாகமாகக் கண்டு களித்த மெலானிய, மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சிறப்பு விருந்தினராக பள்ளிக்கு வந்த மெலானியாவுக்கு மாணவர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்கள் மத்தியில் பேசிய மெலானியா, இந்தியர்கள் அனைவரும் மிகவும் கனிவானவர்கள். பள்ளிக்கு வந்த தன்னை பாரம்பரிய நடனத்துடன் வரவேற்றதற்கு நன்றி என்று கூறினார்.

சர்வோதயா இருபாலர் பயிலும் உயர்நிலைப் பள்ளி இன்று மெலானியாவின் வருகைக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற பெருமையோடு விளங்கும் மெலானியாவை வரவேற்கத் தயார் செய்யப்பட்டிருந்தது.

பள்ளியின் பல்வேறு பகுதிகளிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலங்களை ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் போட்டிருந்தனர்.

பள்ளியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. தில்லி அரசுப் பள்ளிக்கு வந்து மிக மகிழ்ச்சியான பள்ளி வகுப்பறை நாட்களை நேரில் பார்க்க மெலானியா விரும்பியதால், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளி மாணவ, மாணவிகளும் வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டு மெலானியாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்த பள்ளியில் மகிழ்ச்சியான வகுப்பறை திட்டம் சுமார் 14 மாதங்களுக்கு முன்புதான் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com