மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிர்பயா குற்றவாளிகள்

முக்கிய ஆவணங்களை தராமல் திகார் சிறை நிர்வாகம் இழுத்தடிப்பதாகக் கூறி நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் இரண்டு பேர் சார்பாக தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 
மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிர்பயா குற்றவாளிகள்


புது தில்லி:முக்கிய ஆவணங்களை தராமல் திகார் சிறை நிர்வாகம் இழுத்தடிப்பதாகக் கூறி நிர்பயா குற்றவாளிகள் நால்வரில் இரண்டு பேர் சார்பாக தில்லி நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்குரைஞர் ஏ.பி. சிங் சார்பில் தில்லி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற அக்சய் குமார் சிங் மற்றும் பவன் சிங் ஆகியோர் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தராமல் திகார் சிறை நிர்வாகத்தினர் இழுத்தடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட தில்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருக்கும் நிலையில், தொடர்ந்து இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வது, தூக்கு தண்டனையை தள்ளி வைக்க குற்றவாளிகளின் தரப்பு மேற்கொள்ளும் யுக்தி என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்த மனு சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே வினய் குமார் ஷர்மா (26), முகேஷ் சிங் (32) ஆகியோரது மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற முறையீட்டை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்காததை எதிர்த்து குற்றவாளி பவன்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

பவன்குமார் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அஷோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதும், அதனை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்வதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

விசாரணை முடிவில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஆணையை வழங்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வெள்ளியன்று மனுத் தாக்கல் செய்தது. நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com