பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக எழுச்சி பெறும்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-2021 நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக எழுச்சி பெறும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக எழுச்சி பெறும்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-2021 நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக எழுச்சி பெறும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அரசுக் கட்டுமான துறையில் செய்யும் முதலீடுகளால் நடப்பாண்டின் (2019- 20 ஆண்டின்) இரண்டாவது அரையாண்டில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும். அரசுக்குள்ள வலுவான பலத்தின் மூலம் பொருளாதார சீர்திருத்தங்களை துரிதப்படுத்தினால் 2021-இல் நாட்டின் வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இரண்டு பாகங்கள் அடங்கிய 2019-20 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதி அமைச்சகத்தின் இந்த 755 பக்க வருடாந்திர ஆய்வறிக்கையில், பொருளாதார முன்னேற்றங்கள், கடந்த 12 மாதங்களில் அரசு மேற்கொண்ட முக்கிய வளர்ச்சி திட்டங்களின் செயல் திறன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையால் 2019-20-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்- செப்டம்பர்) வளர்ச்சி விகிதம் 4.8%ஆக இருந்தது. தற்போது தேசிய புள்ளியல் அலுவலகத்தின் (சி எஸ் ஓ) முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி இரண்டாவது அரையாண்டில் (அக்டோபர் 19- மார்ச் 20) பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை எட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதையொட்டி, இந்த அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொருளாதார ஆய்வறிக்கையில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையின் விவரம்:
 2019-20 நிதியாண்டில் வரி வருவாய் குறைந்ததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அதிகபட்சமாக 3.3 சதவீதம் இருக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. ஆனால், இதை வைத்துக் கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது. கடந்தாண்டு மொத்த விற்பனை விலைக் குறியீடு 4% ஆக இருந்தது. அதே சமயத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 7 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையின் மூலம் அடிக்கடி மாற்றப்பட்ட வட்டி விகிதக் குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தது.
 ஏற்றுமதி வீழ்ச்சி: சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையாலும், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் காரணமாகவும் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி கண்டது. சீனாவிடமிருந்த அமெரிக்க சந்தையை வியத்நாம், வங்காளதேசம் போன்ற நாடுகள் கைப்பற்றின. உள்நாட்டில் உற்பத்திச் செலவு அதிகரித்து காணப்பட்டதால் ஏற்றுமதி சந்தைகளை நாம் இழக்க நேர்ந்தது. இதைச் சீர் செய்ய வேண்டுமானால், தொழிலாளர் சட்டங்கள் உள்பட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
 அதேசமயம் இந்தியாவின் வளர்ச்சியிலும் அரசின் சீர்திருத்தங்களாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு வெளிநாட்டு நேரடி முதலீடு 2018 ஆம் ஆண்டைவிட நடப்பாண்டில் அதிகரித்தது. 2019 ஏப்ரல் வரை 24.4 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஏழைகளுக்கு குந்தகம் இல்லாமல் உணவுக்கான மானியங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டது.
 விவசாயம்: பிரதமர் அறிவித்துள்ள, விவசாயிகளுக்கு 2024-25-க்குள் இரண்டு மடங்கு வருமானத்தைக் கொடுக்கும் திட்டத்திற்கு மூன்று விதமான ஆலோசனைகளையும் ஆய்வறிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன், நீர்ப்பாசன வசதி, கடன் பெறுவதை எளிமைப் படுத்துதல் போன்ற விவகாரங்களில் மூலம் இந்த நிலையை அடைய முடியும் என்று அறிக்கை கூறுகிறது.
 தொழில்துறை: 2018-19 ஆம் ஆண்டில் தொழில் வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. 2019-20 நிதியாண்டில் ஒரு சதவீதம் கூட இல்லாமல் முதல் எட்டு மாதங்களில் 0.6 சதவீதம் தான் இந்த துறையில் வளர்ச்சி ஏற்பட்டது. இதே போல உற்பத்தித் துறையில் 2018-19-இல் 4.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி, ஒரு சதவீதத்துக்கும் கீழாக 0.9 என குறைந்தது. அரசின் இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையவும் திட்டங்களிலும் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2020 - 25-இல் ரூ.102 லட்சம் கோடி முதலீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீடுகளால் கட்டுமானத் துறை வளர்ச்சி அடையும் . ஆனால், எத்தகைய முதலீடுகள் தேவை என்பதற்கும் அறிக்கையில் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இண்டர்நெட் ஆட்டோமேஷன் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்துவதின் மூலம் இலக்கை எட்ட முடியும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் பொருளாதார ஆய்வு ஆய்வறிக்கையில் 4 இடங்களில் திருக்குறள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. செல்வத்தை உருவாக்க கருத்து ஓர் உன்னதமான மனித அறிவியல். கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம் முதல் திருவள்ளுவரின் திருக்குறள் வரை இந்தியாவில் செல்வத்தை உருவாக்குவதற்கான கருத்துகள் வேரூன்றி இருந்ததையும் இந்த அறிக்கையில் குறிப்பிடத் தவறவில்லை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com