பொருளாதாரஆய்வறிக்கையால் சாமானிய மக்களுக்கு பயனில்லை: காங்கிரஸ் விமர்சனம்

மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். இந்த ஆய்வறிக்கை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் எம்.வி.ராஜீவ் கௌடா, கௌரவ் வல்லப், சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேட்டியளித்தனர்.
 எம்.வி.ராஜீவ் கௌடா கூறியதாவது: பிரதமர் மோடி அரசின் தவறான நிர்வாகம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது.
 இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள 2019-2020-ஆம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார ஆய்வறிக்கை, முற்றிலும் தற்போதைய யதார்த்த நிலையில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஆச்சரியப்படத்தக்கதல்ல. பிரதமர் மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் யதார்த்த உண்மைகளை கண்டு கொள்ளவில்லை. தலைமைப் பொருளாதார ஆலோசகர், பொருளாதாரக் கோட்பாட்டைவிட வரலாற்று குறிப்புகளையும், செல்வ வளத்தைப் புகழ்ந்தும் பொருளாதார ஆய்வறிக்கையைத் தொடங்கியிருக்கிறார்.
 ஏற்றத்தாழ்வு குறித்து இந்த ஆய்வறிக்கையில் கவனம் செலுத்தவில்லை. அதாவது, தேவையைப் புதுப்பிப்பது, முதலீட்டை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை.
 ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள "தாலினாமிக்ஸ்' பொருளாதாரம், விரைவில் காலியாகிவிடும். ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதம் வரை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவது நம்பகமானது இல்லை என்பதால், வளர்ச்சி மீதான கணிப்புகள் தவறனாதாகும்.
 கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருக்கும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சி விகிதம் இருந்தது. 2021 நிதியாண்டில் இது இன்னும் மோசமாக இருக்கும். நேர்மறையான சிந்தனை வரவேற்புக்குரியது. ஆனால், பொருளாதார ஆய்வறிக்கை யதார்த்தமான நம்பக் கூடிய கணிப்புகளைக் கொண்டிருப்பது அவசியமாகும் என்றார் அவர்.
 கௌரவ் வல்லப் கூறுகையில், "வரி பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட அரசு எந்தவித திடமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கம் ஆகியவை தொடர்பாக பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு பிரிவை அரசு எழுதியிருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் எந்த நடவடிக்கைகள் சரி என்று புரிந்துகொண்டிருப்பார்கள்' என்றார்.
 சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், "வருமான வரி செலுத்துவோருக்கு எதாவது நிவாரணம் அளித்தால், காங்கிரஸ் அதை வரவேற்கும். ஆனால், மறைமுறைக வரிகளை மேலும் முறைப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியின் பொருளாதார வளர்ச்சிக் கனவை எட்டுவதற்கு இந்தியா 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும். முதலீட்டு விகிதம் 38 சதவீதத்தில் இருக்க வேண்டும். இந்த ஆட்சியில் வரிப் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. நம்பிக்கை குறைபாடும் அதிகரித்துள்ளது' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com