ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்: சிபிஐ விசாரணை கோரும் கேரள எதிர்க்கட்சிகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கேரள ஐ.டி. பிரிவு அதிகாரி ஸ்வப்னா
கேரள ஐ.டி. பிரிவு அதிகாரி ஸ்வப்னா
Updated on
2 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 

கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு கடந்த ஜூன் 30 அன்று ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து, அதிகாரிகள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று தூதரகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வந்த பார்சல்களை ஆய்வு செய்த போது ஒரு பார்சலில் தங்கம் இருந்தது தெரிய வந்தது. அதில், சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருந்துள்ளது. 

அப்போது பார்சலை எடுத்துச் செல்ல வந்த சரித் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். தூதரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சரித், சமீபத்தில் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். எனினும், தூதரக அதிகாரி என்று கூறி வந்துள்ளார். 

விசாரணையில், இதன் பின்னணியில் அடுத்ததாக ஸ்வப்னா சுரேஷ் என்பவர் இருந்தது தெரிய வந்துள்ளது. தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக பணிபுரிந்த ஸ்வப்னா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டார். தற்போது கேரள அரசின் ஐ.டி. பிரிவின் செயலாளராக பணியில் உள்ளார். ஏர் இந்தியாவிலும் ஸ்வப்னா பணியாற்றியுள்ளார். 

மேலும், அரசின் ஐ.டி. செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஸ்வப்னா நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயனுக்கு முதன்மைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது என்பதை பயன்படுத்தி இருவரும் இந்த கடத்தல் செயலில் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடத்தல் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com