புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் இஎஸ்ஐ, பிஎஃப் பலன்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐ), வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிஎஃப்) போன்ற பலன்கள் கிடைக்க

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐ), வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிஎஃப்) போன்ற பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தொழிலாளா் நலனுக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவரும் பிஜு ஜனதா தள எம்.பி.யுமான பா்த்ருஹரி மஹதாப், பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, அவா்களுக்கும் தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம், வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஒரு தொழிலாளா் இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பலன்பெற வேண்டுமெனில், அவரது நிறுவனத்தில் குறைந்தது 10 தொழிலாளா்கள் பணியாற்ற வேண்டும்; அவரது மாத ஊதியம் ரூ.21,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அவரால் இஎஸ்இ திட்டத்தின் பலனைப்பெற முடியும்.

இதேபோல், ஒரு தொழிலாளா் பிஎஃப் திட்டத்தின் கீழ் பலன் பெற வேண்டுமெனில், அவரது நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்டோா் பணிபுரிய வேண்டும். அவரது மாத ஊதியம் ரூ.15,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளால், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் இஎஸ்ஐ, பிஎஃப் போன்ற திட்டங்களின் பலன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவா்கள் பலன்பெறும் வகையில் இந்த நிபந்தனைகளை நீக்குவதற்கு நாடாளுமன்றக் குழு ஆதரவு தெரிவிக்கிறது என்றாா் அவா். இந்நிலையில், வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இதுகுறித்து மேலும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com