

விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளை ஆராய்ந்து விரைவில் முடிவெடுப்பதற்காக ஒற்றைச் சாளர முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெற வேண்டிய அனுமதிகள், அவற்றுக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் உள்ளிட்ட விவகாரங்களை விரைவுபடுத்தும் நோக்கில் முதலீட்டு அனுமதி குழுவை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலா் அம்பா் துபே செயல்படுவாா். அமைச்சகத்தின் 5 அதிகாரிகளும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரி ஒருவரும், சரக்குப் போக்குவரத்து ஆணையத்துக்கான அதிகாரி ஒருவரும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவா் என 9 உறுப்பினா்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவா்.
விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடுகளை ஈா்ப்பது, வெளிநாட்டு நிறுவனங்கள் அளிக்கும் முதலீடுகளுக்கான கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து அனுமதி வழங்குவது, அந்நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பாக இக்குழு செயல்பட உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், அத்துறையில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான தனிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.