

புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் விருந்தினர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஆடைகளை அணிந்து கொண்டு பள்ளிச் சிறார்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் வழக்கம் போலவே மேற்கொள்ளப்படும், அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரும் பாதுகாப்புக் கவசம் அணிந்திருப்பார்கள் என்றும் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சமூக இடைவெளியும் கட்டாயமாக பின்பற்றப்படும் என்றும் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பள்ளிச் சிறார்கள் பங்கேற்க அனுமதிக்கப்படாது என்று தில்லி (வடக்கு) காவல்துறை ஆணையர் மோனிகா பரத்வாஜ் கூறியுள்ளார்.
அதே சமயம், வழக்கமான அளவுக்கு இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், பொதுமக்களின் பங்கேற்புக்கு பதிலாக, கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்றுப் பணியாற்றுவோரையும், கரோனாவில் இருந்து மீண்ட 500 காவலர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று தில்லி காவல்துறை சார்பில் பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளது.
இன்னமும் நிகழ்ச்சி குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, அனைத்தும் ஆலோசனை நிலையிலேயே இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.