தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை மோசமடைந்ததால், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை

புது தில்லி: கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை மோசமடைந்ததால், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால், அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு (55) புதன்கிழமை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதியானது. கடுமையான காய்ச்சலின் காரணமாக அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தில்லியில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றைத் தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் கேஜரிவாலுடன் ஜெயின் கலந்து கொண்டிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி, தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதல் பரிசோதனையில் கரோனா உறுதியாகவில்லை. தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், 24 மணி நேரத்திற்கு பின்னா் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சத்யேந்தா் ஜெயினின் 88வயது மாமனாா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com