
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கடந்த திங்கள்கிழமை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த சனிக்கிழமை மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பலனளிக்கும் வகையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு, காய்ச்சல் தணிந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் திங்கள்கிழமை பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தில்லி சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்த நிலையில், அவர் தற்போது பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி தற்போது அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.