கரோனாவுக்கு மருந்தா? பதஞ்சலி விளம்பரத்துக்கு ஆயுஷ் தடை

கரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்து வரும் விளம்பரத்தை நிறுத்துமாறு, யோகா குரு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

புது தில்லி: கரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்து வரும் விளம்பரத்தை நிறுத்துமாறு, யோகா குரு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக செவ்வாயன்று பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் விளக்கமளித்தார்.

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான மருந்துக்காகவும், தடுப்பூசிக்காகவும் ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது. இந்தத் தருணத்தில் பதஞ்சலி ஆய்வக மையம் மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து கூட்டு முயற்சியாக மருத்துவ ரீதியிலான சோதனை அடிப்படையிலும், ஆய்வுகள் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்ட முதல் ஆயுர்வேத மருந்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்த மருந்து 3 முதல் 7 நாள்களில் 100 சதவிகிதம் குணமடைய வைக்கிறது. 'கரோனில்' மற்றும் 'சுவாசரி' எனும் கரோனா தொற்றுக்கான மருந்துகளை நாங்கள் இன்று அறிமுகப்படுத்துகிறோம். நாங்கள் இரண்டு சோதனைகளைச் செய்துள்ளோம். முதலில்  தில்லி, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மருத்துவ ரீதியிலாக ஆய்வு மேற்கொண்டோம். இதில் 280 நோயாளிகள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணமடைந்தனர். இந்த மருந்து மூலம் கரோனா மற்றும் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் பிறகு, மிகவும் முக்கியமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உதவியுடன் 95 நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியிலான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்றே நாள்களில் 69 சதவிகிதத்தினர் குணமடைந்தனர். அவர்களுக்கு  3 நாள்களில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 7 நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடமிருந்து அனுமதி பெறுவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார் பாபா ராம்தேவ்.

கரோனாவிலிருந்து குணப்படுத்த பதஞ்சலி கண்டுபிடித்த இந்த மருந்துக்கு இதுவரை எவ்வித மருத்துவ அமைப்பும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவிக்கையில், "கரோனா தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதுவரை எந்தவொரு மருந்தும் நோய்த் தொற்றைக் குணப்படுத்தும் என்பதற்கான சான்றுகள் இல்லை" என்று தெரிவித்தது.

இந்நிலையில் கரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்து வரும் விளம்பரத்தை நிறுத்துமாறு, யோகா குரு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவிற்கு பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக, ஊடகங்களில் வெளியாகும் செய்தி குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் அறிந்து கொள்வதற்காக, கீழ்காணும் தகவல்களை உடனே அளிக்குமாறு பதஞ்சலி நிறுவனம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது: கரோனாவை குணப்படுத்துவதாகக் கூறப்படும் மருந்தின் பெயர் மற்றும் அதன் உள்ளீட்டுப் பொருள்கள், இதற்கான ஆராய்ச்சி நடைபெற்ற மருத்துவமனை அல்லது வேறு இடம் குறித்த விபரங்கள், செய்முறை, சோதனைக்கு எடுத்துக் கொள்ளபட்டோரின் விபரங்கள், பரிசோதனை தர நிர்ணயக் குழுவின் அனுமதி மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகளின் அனுமதி குறித்த விபரங்கள், சோதனை முடிவுகளின் முழுமையான அறிக்கைகள் ஆகியவற்றை வேண்டுகிறோம். இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து தெரிவிக்கும் வரை, கரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக விளம்பரம் செய்யக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com