வெளியானது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேதப்பரிசோதனை அறிக்கை!

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.          
சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

மும்பை: தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.          

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார்.  34 வயதான சுஷாந்த், மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

2013ல்  Kai po che என்ற படத்தில் அறிமுகமான இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த Kai po che, எம்.எஸ். தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி ஆகிய படங்களுக்கு  விருதுகளை பெற்றுள்ளார். 

2019 ஆம் ஆண்டு வெளியான 'சிச்சோர்' இவரது நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும். மேலும் இவர் நடித்த 'தில் பச்சாரா' என்ற படம் மே 8 ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இவரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்தனர். அதேநேரம் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், நடிகர் சேகர் சுமன் உள்ளிட்டோர் குரல் எழுப்பி வந்தனர்.    . 

சுஷாந்தின் தற்கொலை குறித்து காவல்துறையினர் அவரது நெருங்கிய வட்டாரங்கள் உள்ளிட்ட அநேகம் பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேதப்பரிசோதனை அறிக்கை புதனன்று வெளியாகியுள்ளது.

ஐந்து மருத்துவர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கையில், ‘சுஷாந்தின் உடலில் மரணத்திற்கு முன் ஏதேனும் போரட்டங்கள் நடந்ததற்கான அறிகுறிகளோ அல்லது எந்த விதமான வெளிப்புறக் காயங்களோ எல்லை என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அவரது விரல் நகங்களில் இருந்து சதைத்துணுக்கு உள்ளிட்ட எந்த விதமான பொருள்களும் கிடைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக தூக்கிலிட்டுக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறல்தான் இவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அவரது மரணம் எந்த வித சந்தேகங்களும் இல்லாத தற்கொலை’ என்பது தெளிவாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com