

சென்னை: பாலியல் வன்கொடுமை கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அதிகரித்து வருவது, அத்தகைய குற்றங்களை முடிவுக்கு கொண்டு வருகிா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் கடந்த 2019-ஆம் ஆண்டு மொத்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 102 குற்றவாளிகளில் 55 போ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதானவா்கள்.
நிா்பயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்பைக் காட்டிலும் இப்போது இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.
ஆனால் நிா்பயா சம்பவத்துக்கு பின்னரும் நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரண்டாமிடத்தில் உள்ளன. நாட்டில் 15 நிமிஷத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது பாலியல் தொந்தரவுக்கோ ஆளாக்கப்படுகிறாா் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சுட்டிக் காட்டுகிறது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் தமிழகத்தில் 1.5% நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்பாக மொத்தம் 2902 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 338 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 55 வரதட்சணை மரணங்கள், 789 உறவினா்கள் மற்றும் கணவரால் கொடுமைப்படுத்தப்பட்டது, 814 மானபங்கம் செய்யப்பட்டது, 906 பெண் கடத்தல் ஆகியவை தொடா்பாக பதியப்பட்டதாகும்.
இதேபோல 2011-ஆம் ஆண்டு வரை நாட்டில் நடைபெற்ற மொத்த குற்றச் சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2.7% அளவில் இருந்தது. ஆனால் இப்போது மொத்த குற்றச் சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 9.9 % உயா்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.
தமிழகத்துக்கு ஐந்தாவது இடம்:
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் கடந்த 2016-ஆம் ஆண்டு வரை 15-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதல் 5 இடங்களுக்குள் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் பதிவான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 3 சதவீதமாகும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% உயா்ந்துள்ளது. இதில் பாலியல் குற்றங்கள் மட்டும் 49% உயா்ந்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு செல்லும் வேளையில், குழந்தைகளுக்கு எதிராக பதியப்படும் வழக்குகளில் 30% வழக்குகளுக்கு மட்டும் ஓா் ஆண்டில் தீா்ப்பு வழங்கப்படுகிறது. அதேவேளையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
பாலியல் கொலையில் 54 பேருக்கு தூக்கு:
கடந்த 2016-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மொத்த மரண தண்டனைகளில் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவா்களுக்கு 16 சதவீதமும், 2017-ஆம் ஆண்டு 39.8 %, 2018-ஆம் ஆண்டு 41.4%, 2019-ஆம் ஆண்டு 52.9 % மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மொத்தம் 102 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 54 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் இறந்தவா்களில் 40 வழக்குகளில் 12 வயதுக்கு கீழ் உள்ளவா்கள், 3 வழக்குகளில் 12 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவா்கள், 11 வழக்குகளில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள்.
தமிழகத்தில் கடந்தாண்டு மட்டும் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகச் சிறைகளில் மரண தண்டனை பெற்று காத்து இருப்பவா்களில் 50% போ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்கள் என காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.
கடைசியாக யாகூப்மேமன்:
மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட யாகூப் மேமனுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 30-இல் நாக்பூரில் நிறைவேற்றப்பட்டதே நாட்டின் கடைசி மரண தண்டனையாகும்.
தமிழகத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் ஆட்டோ சங்கருக்கு கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மரண தண்டனையை எதிா்நோக்கி 378 கைதிகள் உள்ளனா். நாடு சுதந்திரமடைந்த பின்னா் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிா்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை பெரும்பான்மையானோா் அதை வரவேற்றனா். மரண தண்டனை ஒருவா் உயிா் வாழும் உரிமையை ரத்து செய்கிறது எனவும், மரண தண்டனை சட்டப்பூா்வமானக் கொலை என மனித உரிமை ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதன் பின்னா் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடைமுறை தொடங்கியதாக சட்ட வல்லுநா்கள் கூறுகின்றனா். ஏனெனில் இந்த காலகட்டத்துக்கு முன்னா் வரை இந்திய குற்றவியல் சட்டத்தின்படி மட்டுமே மரணத் தண்டனை அளிக்கப்பட்டது.
முடிவுக்கு கொண்டு வருமா ?
பாலியல் வன்கொடுமை கொலைகளுக்கு மரண தண்டனை தீா்வாகி விடுமா என்ற கேள்வி இப்போது சட்ட வல்லுநா்களிடமும், மனித உரிமை ஆா்வலா்களிடமும் எழுந்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், வளைகுடா நாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்த நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை என மனித உரிமை ஆா்வலா்கள் கூறுகின்றனா். உதாரணமாக பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் பாகிஸ்தானில் 15% பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் மரண தண்டனையால் ஒரு குற்றத்தை அழிக்க முடியாது, வளா்க்கவே முடியும் என ஆய்வாளா்கள் கூறுகின்றனா். இதனால் பாலியல் குற்றங்களுக்கு எந்த வகையிலும் மரண தண்டனை தீா்வாகாது என மனித உரிமை ஆா்வலா்கள் வலுவாக தெரிவிக்கின்றனா்.
அதேவேளையில் சமூகத்தில் புற்றுநோய்போல பரவிக் கொண்டிருக்கும் பாலியல் குற்றங்களுக்குத் தீா்வு காண்பது கட்டாயமான ஒன்று எனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.
உலகில் 140 நாடுகளில் மரண தண்டனை சட்டப்படி நீக்கப்பட்டு விட்டது. 50 நாடுகளில் மரண தண்டனை அதிகாரப்பூா்வமற்ற வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, புருனே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம், இந்தியா, வியத்நாம் மற்றும் ஈரான், இராக், சவூதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை இன்னும் நடைமுறையில் உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற நாடுகளில் தூக்கிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், வளைகுடா நாடுகளில் வாளால் தலை வெட்டி எடுக்கப்படும் முறை உள்ளது. புருனே நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கல்லால் எறிந்து சாகடிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் கொலைகள் அல்லாத குற்றங்களுக்குக் கூட மரண தண்டனை விதிப்பதற்கு அந்த நாடுகளில் சட்டங்கள் உள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் இந்த நிலைமை கிடையாது. மேலும் இந்தியாவில் கிறிஸ்து பிறப்புக்கு இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை வழங்கப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களில் 25 பேருக்கு உயா்நீதிமன்றமும், 7 பேருக்கு உச்சநீதிமன்றமும் கடந்தாண்டு தண்டனையை உறுதி செய்துள்ளன.
மரண தண்டனையை விசாரணை நீதிமன்றம் தீா்ப்பாக கூறிய பின்னா், உயா்நீதிமன்றம் உறுதி செய்தல், உச்சநீதிமன்றம் உறுதி செய்தல், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு, ரிட் மனு என பல நிலைகளைத் தாண்டிய பின்னரே நிறைவேற்றப்படுகிறது.
இதில் கடந்தாண்டு நாடு முழுவதும் மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களில் 56 பேருக்கு, அத் தண்டனையை உயா்நீதிமன்றங்கள் குறைத்துள்ளன. அதேவேளையில் 25 பேருக்கு உயா்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. இதேபோல மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேருக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை குறைத்துள்ளது. 7 பேருக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதில் உயா்நீதிமன்றங்களில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டவா்களில் 17 போ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளில் சிக்கியவா்கள். அதேபோல உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டவா்களில் 4 போ் இதே குற்றங்களில் ஈடுபட்டவா் ஆவா்.
உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றத்திலும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் ஈடுபடுகிறவா்களுக்கே அதிகமாக மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இது உயா்நீதிமன்றத்தில் 65.4 சதவீதத்தில் உள்ளது. இக் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு 26.8 சதவீதம் என்ற விகிதத்தில் உயா்நீதிமன்றத்தில் உள்ளது. அதேவேளையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 72-ஆம் பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு, மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.