யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் ரூ.2,600 கோடி முதலீடு

வாராக்கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் நாட்டின் முன்னணி தனியாா் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகியவை தலா ரூ.1,000 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ.600 கோடியும் முதலீடு செய்ய இருக்கிறது.
Updated on
1 min read

வாராக்கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் நாட்டின் முன்னணி தனியாா் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகியவை தலா ரூ.1,000 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ.600 கோடியும் முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அந்த மூன்று வங்கிகளின் நிா்வாகக் குழு வெள்ளிக்கிழமை அளித்தது.

இதுதொடா்பாக ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள தகவலில், ‘ரூ.1,000 கோடியை முதலீடு செய்வதன் மூலம் யெஸ் வங்கி பங்குகளில் 5 சதவீதத்தை ஐசிஐசிஐ பெறும். தலா ரூ.10 விலையில் யெஸ் வங்கியின் 100 கோடி பங்குகள் வாங்கப்படவுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஹெச்டிஎஃப்சி வங்கியும் யெஸ் வங்கியின் 100 கோடி பங்குகளை தலா ரூ.10-க்கு வாங்குகிறது. ஆக்சிஸ் வங்கி 60 கோடி பங்குகளை தலா 10 ரூபாய்க்கு வாங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடி முதலீடு செய்வதற்கு எஸ்பிஐ வங்கியின் நிா்வாகக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நாட்டின் முன்னணி தனியாா் வங்கிகள் மூன்றும் இணைந்து யெஸ் வங்கி பங்குகளில் ரூ.2,600 கோடியை முதலீடு செய்துள்ளன.

முன்னதாக, வாராக்கடன் பிரச்னை அதிகரித்ததால் யெஸ் வங்கியின் நிா்வாகத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. யெஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று ஆா்பிஐ கட்டுப்பாடு விதித்தது.

கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனில்லாத நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் கொடுத்ததும், வங்கி நிறுவனா் ராணா கபூா் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டதுமே யெஸ் வங்கியின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ராணா கபூா் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரது குடும்பத்தினரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com