மகனின் இறுதிச் சடங்கை தொலைவில் இருந்து பார்த்த மருத்துவப் பணியாளர்

கரோனா பாதித்த நோயாளிகளுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ஊழியரின் மூன்று வயது மகன், வேறொரு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி, இறுதியில் மரணம் அடைந்தான்.
மகனின் இறுதிச் சடங்கை தொலைவில் இருந்து பார்த்த மருத்துவப் பணியாளர்
Updated on
1 min read


லக்னௌ: கரோனா பாதித்த நோயாளிகளுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ஊழியரின் மூன்று வயது மகன், வேறொரு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி, இறுதியில் மரணம் அடைந்தான்.

மணீஷ் குமார் (27) லோக்பந்து மருத்துவமனையின் வார்ட்பாயாக பணியாற்றி வருகிறார். கரோனா நோயாளிகளுக்கான வார்டில் பணியாற்றி வந்த ஒரே காரணத்தால், மணீஷ் தனது மகனின் இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல், தொலைவில் நின்று பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

சனிக்கிழமை இரவு, கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் நோயாளிக்காக பணியாற்றிக் கொண்டிருந்த போது, என் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. மகன் ஹர்ஷித் மூச்சு விடச் சிரமப்படுவதாகவும், வயிற்று வலியால் அவதிப்படுவதாகவும் மனைவி கூறினார்.

கரோனா நோயாளிகளுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த போது வந்த இந்த அழைப்பால் கடும் துயரத்துக்கு ஆளானேன். ஆனால் வேலையை அப்படியே விட்டுவிட்டு போகும் நிலையில் நான் இல்லை. அதனால், என் குடும்பத்தினர் குழந்தையை கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு சென்றனர். அவன் புகைப்படத்தை எனது வாட்ஸ்ஆப்புக்கு அனுப்பினர். நள்ளிரவு 2 மணியளவில் அவன் இந்த உலகை விட்டு, எங்களைவிட்டுவிட்டு சென்றுவிட்டான்.

எனது மகனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் எனது பொறுப்பில் இருந்த நோயாளிகளை விட்டுவிட்டுச் செல்ல முடியாமல் தவித்தேன். என்னுடன் பணியாற்றிய சக நண்பர்கள் என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை வார்டுக்குள் நான் செல்லவில்லை. எனது மகனை வெளியே கொண்டு வரும் வரை காத்திருந்தேன். மகன் வெளியே வந்தான். ஆனால் அசைவற்று, உயிரற்று. ஆனாலும் நான் அவனை வெகு தொலைவில் இருந்துதான் பார்த்தேன். என் மூலமாக என் குடும்பத்தார் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே.

என் மகன் இப்போது உயிரோடு இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

என் மகனின் உடல் சென்ற வாகனத்தின் பின்னாலேயே நானும் சென்றேன். வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தேன். உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்தபோதும் தொலைவில் இருந்து பார்த்து அழுதேன். எனது மனைவிக்கும் தொலைவில் இருந்தே ஆறுதல் கூறுனேன். இன்னும் ஓரிரு நாள்களில் பணிக்குத் திரும்பிவிடுவேன் என்கிறார் மணீஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com