ரயில்களுக்கான  முன்பதிவு தொடங்கியது; முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது ரயில்வே

ரயில்களுக்கான  முன்பதிவு தொடங்கியது; முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது ரயில்வே

நாளை தொடங்கப்பட உள்ள பயணிகள் ரயில் சேவையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

புது தில்லி: நாளை தொடங்கப்பட உள்ள பயணிகள் ரயில் சேவையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

மே 12 முதல் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. முதல் கட்டமாக தில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு நாளை ரயில் சேவை தொடங்க இருக்கிறது.

இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (மே 11) மாலை 4 மணிக்கு தொடங்கியது. பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு பெற முடியாது.

இது குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதாவது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கும் முகவர்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

அதிகபட்சமாக 7 நாட்களுக்கு முன்பு வரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

உறுதியான ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

ரயிலில் ஏறிய பிறகு டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் பெறும் முறையும் அனுமதிக்கப்படாது.

ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு, ரயில் புறப்பட 24 மணி நேரம் முன்பு வரை அனுமதிக்கப்படும். ரயில் டிக்கெட் ரத்துக் கட்டணமாக 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

பரிசோதனைகள் செய்வதற்கு ஏதுவாக, பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பே ரயில் நிலையத்துக்கு வந்து விட வேண்டும்.

தற்போது இயக்கப்படும் அனைத்து சிறப்பு ரயில்களும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகவே இருக்கும். சாதாரண காலங்களில் இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயிலின் கட்டணம் இதற்குப் பொருந்தும்.

அனைத்துப் பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுரை வழங்கப்படுகிறது.

பயணிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான போர்வைகள், உணவு, குடிநீர் போன்றவற்றை எடுத்து வர வேண்டும். ரயிலில் கட்டணத்துக்கு ஏற்ப உலர்ந்த மற்றும் சாப்பிடத் தயாராக இருக்கும் உணவு, குடிநீர் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட தேசிய பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வெளி மாநில தொழிலாளா்களுக்காக கடந்த 1-ஆம் தேதி சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இவை சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படும். தில்லியில் இருந்து திப்ரூகா், அகா்தலா, ஹௌரா, பாட்னா, பிலாஸ்பூா், ராஞ்சி, புவனேசுவரம், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து தேவைக்கு ஏற்ப மேலும் பல நகரங்களுக்கு ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com