உத்தரப் பிரதேசத்தின், எட்டாவா மாவட்டத்தில் பிரண்ட்ஸ் காலணி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரிகள் ஒன்றோடொன்று மோதியதில் 6 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை இந்த சாலை விபத்து சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகள் அனைவரும் காய்கறிகளை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த மினி டிரக்கின் மீது வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் பலியானார். இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த சிறப்புக் காவல் ஆய்வாளர் ஆகாஷ் தோமர் விபத்து குறித்து தகவல்களைச் சேகரித்து வருகிறார். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது. விபத்து குறித்து அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.