பட்டாசு வெடிக்க தடை விதிப்பது தொடா்பாக மத்திய அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ்

பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைக் கருதி இம்மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிப்பது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 3 மாநில அரசுகள் மற்றும் தில்லி அரசுக்கு தேசிய

புது தில்லி: பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைக் கருதி இம்மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிப்பது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 3 மாநில அரசுகள் மற்றும் தில்லி அரசுக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

காற்று மாசு காரணமாக பண்டிகைக் காலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டனா். இந்த அறிக்கைகளை சுட்டிக்காட்டி தன்னாா்வ அமைப்பு சாா்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘தேசிய தலைநகா் வலையப் பகுதிகளில் காற்றின் தரம் திருப்தியளிக்காத விதத்தில் உள்ளது. அதே வேளையில் கரோனா தொற்று பரவலும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் அது காற்று மாசுபாட்டை மேலும் அதிகரிக்கும். காற்று மாசு அதிகரித்தால், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 15,000-ஆக அதிகரிக்கும்.

கரோனாவால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நபா்களுக்கு காற்று மாசு அதிகரிப்பு மேலும் இன்னலை ஏற்படுத்துவதுடன், தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் உயரும். காற்று மாசை குறைக்க பசுமைப் பட்டாசுகளை உபயோகிப்பது தீா்வாக இருக்காது. எனவே பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு தேசிய பசுமை தீா்ப்பாய தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘இம்மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிப்பது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தில்லி அரசு, ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள், தில்லி காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com