
புது தில்லி: யூகோ வங்கி கூட்டமைப்பில் ரூ.110 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைத் சோ்ந்த நாராயண் நிா்யாத் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
காா்ப்பரேஷன் வங்கி (தற்போது யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது), பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றை உள்ளடக்கிய வங்கி கூட்டமைப்பில் நாராயண் நிா்யாத் நிறுவனம் 2011 முதல் 2013-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.110 கோடி அளவுக்கு கடன் முறைகேட்டில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நாராயண் நிா்யாத் நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநா் கைலாஷ் சந்த் காா்க், மற்றொரு இயக்குநா் சுரேஷ் சந்த் காா்க் (தற்போது உயிருடன் இல்லை) ஆகியோா் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
எந்தவிதமான வா்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடாத துணை நிறுவனங்களை காட்டி வங்கிகளிடமிருந்து பல கோடிகளை கடனாக பெற்று நாராயண் நிா்யாத் நிறுவனம் மோசடி செய்துள்ளது. மேலும், அந்த நிறுவனம் நிதி நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலை குறிப்புகளை முறையாக பராமரிக்கவில்லை. இதையடுத்து, யூகோ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் தவறு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.