'பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள்தானாம்'

பிகாரில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
'பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள்தானாம்'
'பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள்தானாம்'


தர்பங்கா: பிகாரில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த தேர்தலில், முக்கியத் தலைவர்கள் பலரின் பிரசாரங்கள், வாக்குறுதிகள் என அனைத்தையும் தாண்டி, நிதிஷ் குமாரின் மிக உறுதியான வாக்கு வங்கியான பெண்கள், வழக்கம் போல அவருக்கு சத்தமேயில்லாமல் தங்களது பெருவாரியான வாக்குகளை வாரி வழங்கி, வெற்றிக் கனியை எளிதாக்கியுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக 57.05% வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், பெண்களின் வாக்குகள் 59.7% ஆகவும் அதைவிடக் குறைவாககே ஆண்கள் வாக்களித்திருந்தனர். அது 57.7%  ஆகும்.

ஒட்டுமொத்தமாக 38 மாவட்டங்களில், 23 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்திருந்தனர்.

நிதிஷ் குமார் பிகாரில் முதல் முறையாக பதவிக்கு வந்த 2005-ஆம் ஆண்டு முதலே பெண்களின் வாக்குகளை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நிதிஷ்குமார் பிகாரில் ஆட்சிக்கு வந்த போது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் இருந்தது.

அவர் ஆட்சிக்கு வந்த முதல் ஐந்தாண்டு காலத்தில், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பஞ்சாயத்து மற்றும் நகராட்சி பதவிகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது, பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும், அரசுப் பணியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டையும் அறிமுகப்படுத்தினார்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், 2016-ஆம் ஆண்டு பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பிகாரில் மதுபானங்களுக்குத் தடை விதித்தார்.

இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டம், பஞ்சாயத் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, அரசுப் பணியில் இட ஒதுக்கீடு, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், நிதியுதவி போன்றவை பிகார் மாநிலத்தில் வாழும் பெண்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியதாக அரசியல் ஆய்வாளர் லா குமார் மிஷ்ரா கூறுகிறார்.

பிகாரில் நடந்த தேர்தலில், பெண்களின் வாக்குகளே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு உதவியதாக மற்றொரு அரசியல் ஆய்வாளர் நிலஞ்சன் முகோபாத்யாய் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com