
புதுதில்லி: தீபாவளி கொண்டாட்டத்தின் போது தடையை மீறி பட்டாசுகளை வெடித்ததால் தேசிய தலைநகர் தில்லி முழுவதும் பல இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.
சனிக்கிழமை இரவு தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், தேசிய தலைநகர் தில்லி முழுவதும் பல இடங்களில் மிகவும் மோசமான புகை மூட்டம் காணப்பட்டது.
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை இரவு 11 மணியளவில் 330 ஆக பதிவாகியிருந்தது.
அதிகபட்சமாக ஆனந்த் விஹார் (481), இந்திரா காந்தி விமான நிலையம் (444), ஐடிஓ (454), லோதி சாலை (414) ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் ‘மோசம் பிரிவில்’ பதிவானது.
தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவை மீறி பல இடங்களில் பட்டாசுகளை வெடித்ததால் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலே நீடித்து வருகிறது.
காற்றின் தரம் மோசமடைவதையும், கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் முற்றிலும் தடை விதித்தது.
இதனிடையே, தீபாவளி தினமான சனிக்கிழமை தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்ததாகவும், வெடித்ததாகவும் 76 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 3407 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
‘காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருக்கும்போது நீண்ட நேரம் வெளியில் இருந்தால் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். மோசம் பிரிவில் இருந்தால் சுவாச அசெளகரியம் ஏற்படுத்தும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.