
காங்கிரல் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் 'வெறுக்கத்தக்கவை' என்று சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா "எ பிராமிஸ்ட் லாண்ட்" என்ற தலைப்பிலான புதிய பத்தகத்தில் தனது நினைவுக்குறிப்பு குறித்து எழுதியுள்ளார். அதில், உலக உளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த நூல் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் விமரிசனம் எழுதியுள்ளது.
ராகுல் காந்தி மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிடுகையில், "பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர், மாணவரைப் போல பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட விஷயத்தில் ஆழ்ந்த அறிவு பெறுவதற்கான ஆர்வமோ அல்லது தகுதியோ இல்லாதவராக உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒபாமாவின் இந்த கருத்துக்கு சிவசேனை கட்சி எம்.பி சஞ்சய் ரௌத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஒரு வெளிநாட்டு அரசியல்வாதி, இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க முடியாது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குறித்து ஒபாமாவின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை. நாங்கள் ஒருபோதும் அதிபர் 'டிரம்ப் பைத்தியக்காரர்' என்று கூற மாட்டோம். இந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்?" என்று சஞ்சய் ரௌவுத் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி குறித்து பராக் ஒபாமா கூறிய கருத்துக்காக, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிகாரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர், ஒபாமாவை கடைசியாக சந்தித்ததிலிருந்து ராகுல் மாறிவிட்டார் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.