
பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் வரவர ராவ், நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற மும்பை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மாநில அரசின் செலவில் சிகிச்சை பெறவுள்ள அவரை, மருத்துவமனை விதிமுறைகளின்படி குடும்பத்தினர் அவரைச் சந்திக்கலாம்.
மேலும் இந்த வழக்கை டிசம்பர் 3-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், தகவல் தெரிவிக்காமல் அவரை மருத்துவமனையிலிருந்து அனுப்பக் கூடாது என்றும் அவரது மருத்துவ அறிக்கையின் நகலைச் சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நக்சல்களுடன் தொடர்பு இருப்பதாகவும், புணே மாவட்டம் பீமா கோரேகானில் வன்முறையைத் தூண்டியதாகவும் நவம்பர் 2018-இல் வரவர ராவ் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 1,2018-இல் நடைபெற்ற வன்முறையின்போது ஒருவர் பலியானார், 10 காவலர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். புத்தாண்டு தினத்தில் பீமா கோரேகான் போரின் 200-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் பீமா கோரேகானை நோக்கிச் சென்ற கார்கள் மீது சிலர் கற்கள் வீசியதால் வன்முறை வெடித்துள்ளது. கற்களை வீசிய நபர்கள் காவிக் கொடி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 162 பேர் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.