மும்பை: ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநில வருவாய் புலனாய்வுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து கடந்த 22-ஆம் தேதி பஞ்சாபில் இருந்து மும்பை வரும் தங்கக் கோவில் சிறப்பு ரயிலில் பயணம் செய்த இருவர், மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியவுடன் வருவாய் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களது சட்டைக்கு உட்புறமாக ரகசிய உடையில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 12 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. தலா ஒரு கிலோ எடையுள்ள அந்தக் கட்டிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ 6.25 கோடியாகும். உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜரபடுதப்பட்ட அவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தும் கும்பலின் பகுதியாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. அத்துடன் அவர்கள் அதே நடைமுறையினைப் பின்பற்றி, ராஜஸ்தானின் பரத்புரிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு இந்த தங்கக் கட்டிகளை கடத்தியதும் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.