
புது தில்லி: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணையை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்கும், தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், உயா் சிறப்புப் படிப்புகளும் நீட் தோ்வு வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகின்றன. முதுநிலை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை 50 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீதம் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வந்தது. அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் அதுதொடா்பான உத்தரவுகளின்படி 2017-க்குப் பிறகு அந்த நடைமுறையைத் தொடர இயலவில்லை.
டிஎம், எம்சிஹெச் ஆகிய உயா் சிறப்புப் படிப்புகளில் தமிழகத்தில் 190 இடங்கள் உள்ளன. அவை அனைத்தையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம்தான் கலந்தாய்வு மூலம் இதுவரை நிரப்பி வருகிறது. மருத்துவ மேற்படிப்புகளிலும், குறிப்பாக, உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு அரசு மருத்துவா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் வாதங்களும், கோரிக்கைகளும் விசாரணையின்போது முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இருவேறு அரசாணைகளை பிறப்பித்தது.
அதில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை:
எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி 50 சதவீதம் மாநில ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். அதில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பொது இடங்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்குத் தனியாா் மருத்துவா்களும், அரசு மருத்துவா்களும் போட்டியிடலாம்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு மருத்துவா்கள், அப்படிப்பை முடித்து சிறப்பு படிப்புகளுக்குச் செல்லும் வரை அரசுப் பணியிலேயே தொடர வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான அரசாணை:
உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசு சேவையில் உள்ள மருத்துவா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ளவை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு (உயா் சிறப்பு படிப்புகள்) மதிப்பெண் அடிப்படையில் மாநில மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழுவே மாணவா் சோ்க்கையை நடத்தும்.
மாநில ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெறும் அரசு மருத்துவா்கள், தாங்கள் பணி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவப் பணிகளிலேயே நீடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.