ரூ.2 கோடி வரை வட்டிக்கு வட்டி இல்லை: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
ரூ.2 கோடி வரை வட்டிக்கு வட்டி இல்லை: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
ரூ.2 கோடி வரை வட்டிக்கு வட்டி இல்லை: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்


புது தில்லி: ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

பொது முடக்க காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், வீட்டுக் கடன்,  தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடனுக்கான தவணைக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்றும், சிறு, குறு, தொழில் கடன்,  கிரெட்டில் கார்டில் கடன் பெற்றவர்களுக்கான கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில் கடன் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். 

கடன் தவணை சலுகைக் காலத்துக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய நிலையில் மத்திய அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து, அக்டோபர் 5-ம் தேதி தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பலர் வேலையிழந்தனர். அதைக் கருத்தில் கொண்டு தனிநபர்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் 1 - ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 - ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்தது. ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கிகள் வட்டி விதித்தன. 

இதனால் அதிருப்தியடைந்த சிலர், வங்கிகளின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. 

அந்த மனுக்களை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 

அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எந்தவொரு கடனையும் வங்கிகள் வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று கடந்த மாதம் 10 - ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com